உழைப்பாளர் திருவிழா 2019 பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு
business directory in tamil

பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் வழக்கம் போல் இந்த ஆண்டும் சர்வதேச தொழிலாளர் தினம் “உழைப்பாளர் திருவிழா 2019” என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணி முதல் 1 மணி வரை ஹமாத் டவுன் மால்கியா கிராமத்தில் அமைந்துள்ள மல்கியா சங்க உள்ளரங்கில் கிம்ஸ் மருத்துவமனை உதவியுடன் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், நேபால் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுமாக சுமார் 1500 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். மால்கியா சங்கத்தின் செயலாளர் அப்துல்லா அவர்கள் பேசும்போது “தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த மே தின சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது, ஏற்பாடு செய்த பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையுன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி நினைவுப்பரிசை வழங்க சங்க பொது செயலாளர் க செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 5 மணி முதல் சுகாயா பகுதியில் அமைந்துள்ள கேரளா கதோலிக் சங்க உள்ளரங்கில் இயல், இசை மற்றும் நாடகம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஹ்ரைன் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவினர் குத்து விளகேற்றினர். சங்க வேலை வாய்ப்புத்துறை இணை செயலாளர் ஏ பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார். முழு நிகழ்வையும் சங்க வேலை வாய்ப்புத்துறை செயலாளர் மு முகமது அபுசாலி மற்றும் பட்டிமன்றம் புகழ் பவானி பிரேமானந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். தமிழர் கலை மீட்புக்குழுவின் ஆதிப்பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

குழந்தைகள் உழைப்பாளர்கள் போல் வேடமணிந்து வந்து உழைப்பாளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அனைத்து குழந்தைகளும் பரிசுகள் வழங்கப்பட்டது. குழந்தைகள் நடனத்திற்கு மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார். மாடாட்ட மற்றும் பொய் கால் குதிரையாட்ட கலைஞர்கள் தங்களது திறைமையை வெளிக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். சங்க பொருளாளர் லோ ஜகன்குமார் இயக்கத்தில் உழைப்பாளர்களின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக “5.0” என்ற மேடை நாடகமும் நடைபெற்றது.

ஔவையார் கல்விக்கூடத்தின் ஒரு வருட சாதனையை எடுத்துரைக்கும் குறும்படமும் “கஜா” புயலின் போது பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய குறும்படமும் திரையிடப்பட்டது. முக்கியஸ்தர்களுக்கான நேரத்தை மங்கையர்கள் குழு உறுப்பினர் தனலட்சுமி பாலச்சந்தர் தொகுத்து வழங்கினார். பஹ்ரைனில் வசிக்கும் தொழிலாளர்கள் சார்பாக மூத்த தொழிலாளர் பாஸ்கர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட FEED THE NEED BAHRAIN அமைப்பின் நிறுவனர்கள் மிச்சிலி பைளே மற்றும் ரியாஸ் ஜிவாஞ்சி ஆகியோரை சங்க செயற்குழு உறுப்பினர்கள் கௌரவித்தனர். அரபு நாடுகளிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் பஹ்ரைன் தமிழ் வானொலியை பஹ்ரைன் பினான்சிங் நிறுவனத்தின் பொது மேலாளர் பான்சிலி வர்கி தொடங்கி வைத்தார். இந்த வானொலியை www.bahraintamilradio.com என்ற இணையத்திலும் BAHRAIN TAMIL RADIO என்ற PLAY STORE-ரிலும் உலகம் முழுவதும் கேட்டு மகிழலாம். சங்கத்தின் தலைவர் முனைவர் பெ கார்த்திகேயன் தொகுத்த “இந்திய சுதந்திர போரில் தமிழரின் பங்கு” நூலின் இரண்டாம் பாகத்தை நியூ இந்தியன் பள்ளியின் முதல்வர் கொள்ளத் கோபிநாத மேனன் வெளிட்டார். சங்க பொருளாளர் லோ ஜகன்குமார் எழுதிய “தமிழரின் ஐவகை நிலங்கள்” என்ற புத்தகத்தை கிம்ஸ் மருத்துவமனையின் வளர்ச்சித்துறை மேலாளர் எஸ் இராஜசேகர் வெளியிட்டார். பல்வேறு இந்திய அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ கார்த்திகேயன் பேசும்போது “பாலைவனமான அரபு நாடுகளை சோலைவனமாக மாற்றியதில் இந்திய தொழிலாளர்களுக்கு குறிப்பாக தமிழக தொழிலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு, அவர்களை கௌரவிக்கும் விதத்தில் “உழைப்பாளர் திருவிழா” என்ற பெயரில் பஹ்ரைன் வாழ் தமிழர்களின் பேராதரவோடு வருடம்தோறும் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்” என்று கூறினார். நிகழ்ச்சி பொறுப்பாளர் ரா சு பிரதீப் கூறுகையில் “வழக்கம் போல் இந்த திருவிழாவையும் வெற்றி விழாவாக மாற்றிக்கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

நன்றிகளுடன்,
மதன் குமார் செல்லம், ஊடகத்துறை – செயலாளர்
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்
+973 38838046

#BTUS #LabourDay