ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. காலமானாதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது.
முன்னதாக, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கமலை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.
அதை ஏற்ற கமல், மக்கள் நீதி மய்ய கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அறிவித்தார். இந்த சூழ்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல் இன்று தேர்தல் பரப்புரை செய்தார்.
கட்சி தொடங்கியதில் இருந்தே, இரு பெரும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த கமல், “இந்த முடிவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கானது. 2024 பொதுத்தேர்தலைப் பற்றிச் சொல்ல இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.
தேசிய முக்கியத்துவம் என்று வரும்போது கட்சி சித்தாந்தத்தை கடக்க வேண்டும். மக்கள் அதில் முதன்மையானவர்கள். அனைவரையும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாங்கள் எதிரானவர்கள். இந்தியாவின் பன்முகத்தன்மை அதை தனித்துவமாக்குகிறது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இது பெரிய காரணத்திற்கு எதிரான போர். இதில் நான் சிறிய வேறுபாடுகளை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். மீண்டும் போருக்கு வருவோம். ஊழலுக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டேன் என்று அர்த்தம் இல்லை” என்றார்.