ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, துணிப்பைகளை வாங்குவதை ஊக்குவிக்கவும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தமிழக அரசு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘மீண்டும் மஞ்சப்பை’ எனும் பிரச்சாரத்தை நேற்று (23.12.2021) தொடங்கி வைத்தார். இப்பிரச்சாரத்தை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது.
மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களின் கண்காட்சியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வரால் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திரு.மு.க.ஸ்டாலின் தனது துவக்க உரையில் “சுற்றுச்சூழல் பிரச்சனை மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் துணிப்பையே சரியானது.” என்று கூறினார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்தவும் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு துறை அமைச்சர் திரு.மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் திரு.ராமச்சந்திரன், மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.