கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதேபோல், 10 தீவுகளை இணைக்கும் கொச்சி வாட்டர் மெட்ரோ (நீர்வழி மெட்ரோ) சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார்.
அதேபோல், நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் – விபின் மற்றும் விட்டிலா – கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். பீக் ஹவர்களில் உயர் நீதிமன்றம் – விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும்.