தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது.
இந்த பூமியில் சுமார் 2 கோடி வருடங்களாக மனிதர்களும், அவனுடைய மூதாதையர்களும் வசித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது மிக நீண்ட காலம். நமக்கு முன் இங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான தலைமுறையினர் நமக்கு ஏதோ ஒன்றை கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். நாம் பேசும் மொழி, நாம் உட்காரும் விதம், நம் உடைகள், நம் கட்டிடங்கள் என்று இன்று நமக்குத் தெரிந்த அனைத்துமே நமக்கு முன்பிருந்த தலைமுறையினரிடமிருந்து வந்தவைதான்.
மஹாளய அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி செய்து அவர்களது நினைவாக அன்னதானம் வழங்குவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது.
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. நமது வாழ்வில் வரும் இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது