தமிழகத்தின் மிக முன்னோடி திட்டம் மதிய உணவுத் திட்டம். இன்றளவும் அது பலரால் புகழப்படக் கூடிய திட்டமாகும். காமராஜர் முதல்வராக இருந்தபோது கிராமப்புறங்களில் எழுத்தறிவு மிகவும் பின்தங்கி இருந்தது. அதை எப்படி உயர்த்துவது என்று யோசித்ததில், கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்கள் அதிகம் காணப்படுவதால் உணவுக்கு செலவுப் போக படிப்பிற்கு செலவிட முடியாத ஓர் நிலை இருந்தது. இதனால் அன்றைய முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தினால் உணவு உண்பதற்காக பள்ளிக்கு மாணவர்கள் வருவார்கள், பசியென்பது இல்லாமல் படிப்பை தொடரலாம் என்ற எண்ணத்தில் அத்திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் 1980களில் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். மதிய உணவானது சத்தாக இருக்க லேண்டும் என்பதே இதன் நோக்கம். பின்னர் உணவோடு பால், முட்டை, சிறு தானியங்கள் என்று வழங்கப்பட்டு மாணவர்களின் உடல்திறனை அதிகரிக்க வழிவகை செய்தது அத்திட்டம்.
இதற்கெல்லாம் சிறப்பானதாய் மற்றொரு திட்டம் இன்றைய தமிழக அரசு கொண்டுள்ளது. காலை சிற்றுண்டித் திட்டம். தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதிய உணவு, சத்துணவு, காலை சிற்றுண்டி என அரசுப் பள்ளி மாணவர்கள் பசியென்பதையே அறியாமல் படிக்க வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.