எங்கேயும் எப்போதும்’ , ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள ராங்கி படம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவான இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது.
கிசுகிசு எல்லாம் எழுத மாட்டேன், ஸ்ட்ராங்கான விஷயங்களை மட்டுமே ஹேண்டில் செய்யும் போல்டான ஊடகவியலாளர் தையல் நாயகியாக நடிகை த்ரிஷா இந்த ராங்கி படத்தில் நடித்துள்ளார். ராங்கி என்பதற்கு போல்டான பெண் என்கிற அர்த்தத்தை இயக்குநர் எம். சரவணன் கொடுத்திருக்கிறார். தனது அண்ணன் மகளின் போட்டோவை பயன்படுத்தி ஒரு பெண் சாட் செய்வதை தெரிந்து கொள்ளும் த்ரிஷா அந்த 17 வயது பையன் யார் என்பதை கண்டு பிடிக்க அவனுடன் சாட் செய்கிறார். பின்னர் அவன் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் த்ரிஷாவுக்கு ஏற்படும் தீவிரவாத சிக்கல் தான் ராங்கி படத்தின் கதை.
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்திலேயே செம அழகாக இருந்தார். அதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட இந்த ராங்கி திரைப்படத்தில் அவரை மேலும், அழகாக ஒளிப்பதிவாளர் சக்திவேல் ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் த்ரிஷா அழகாக தெரிவது ரசிகர்களை நிச்சயம் தியேட்டரில் கவரும் விஷயமாக மாறி உள்ளது.
அந்த 17 வயது இளைஞருடன் காதல் வயப்பட்டது போல த்ரிஷா சாட் செய்ய ஆரம்பிக்க வெளிநாட்டில் எண்ணெய் டீலிங் செய்யும் அமைச்சர் ஒருவரின் போட்டோவை அந்த இளைஞர் த்ரிஷாவுக்கு அனுப்புகிறான். உடனே அதை தான் வேலைப்பார்க்கும் ஊடகத்தில் பிரேக்கிங் செய்கிறார் த்ரிஷா. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர் கொல்லப்பட, த்ரிஷாவுக்கு அந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த விசாரணைக்காக தனது அண்ணன் மகளையும் அழைத்துக் கொண்டு அந்த இளைஞன் ஆலிமை தேடி த்ரிஷா லிபியா நாட்டுக்கு செல்ல அங்கே நடக்கும் ட்விஸ்ட்டுகள் என திரைக்கதை செம சூப்பராக நகர்கிறது.
இசையமைப்பாளர் சத்யாவின் பின்னணி இசை, ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சக்திவேலின் உழைப்பு படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸின் கதை மற்றும் சரவணனின் இசை படத்திற்கு பிளஸ். நடிகை த்ரிஷா மற்றும் ஆலிம் படத்தை சரியான இடத்தில் பலமாக தாங்குகின்றனர்.
தாமதமாக இந்த படம் வெளியானதே பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. பல இடங்களில் சுவாரஸ்யமான காட்சிகளுக்கு மத்தியில் சில தவிர்க்க முடியாத சொதப்பல்கள் ரசிகர்களை அப்செட் ஆக்குகின்றன. சில நெருடல்களை தாங்கிக் கொண்டால் இந்த ராங்கியை நிச்சயம் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.