உள்ளம் உருகிய அன்னையர் தின கலந்துரையாடல் நிகழ்ச்சி

நிகழ்வுகள்


மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!

முதல் இரண்டு வரி எல்லோருக்கும் தெரியும்….
அடுத்த இரண்டு வரி மிக மிக இனிமையான வரிகள் ….

பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள் வளர்கின்றன. பெண் இல்லாவிட்டால் அறம் எங்கே வளரப் போகிறது? பெண்மையின் சிறப்பை கவிமணி மிக அழகாகப் பாடி  இருக்கிறார்.

சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? – பயம்
     சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே – ஒரு
     முத்தம் அளிக்க வருபவர் ஆர்?

உள்ளந் தளர்வுறும் நேரத்திலே – உயிர்
     ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளியெடுத்து மடியிருத்தி – மக்கள்
     அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?

-உண்மை தானே, ஒரு ஒப்பில்லா தெய்வீகப் பிறவி தாய்!
அன்னையர் அனைவரையும் போற்றும் வகையில் சான் ஆண்டோனியோ தமிழ் சங்கம், மே மாதம் ஏழாம் தேதி நடத்திய ‘அன்னையர் தின’ சிறப்பு கலந்துரையாடலில் நம் மக்களில் சிலர் கலந்து கொண்டு பாடியும்,உரையாடியும் சிறப்பித்தனர். தங்கள் அம்மாக்களை பற்றியும், மென்மையும்,மேன்மையும் பொருந்திய தாய்மை உணர்வுகளின் சிறப்பம்சங்களைப் பற்றியும் பேசினர்.

உள்ளமும் உடலும் உருக, நா தத்தளிக்க ஓர் உணர்ச்சிகரமான நிகழ்வாக நடந்தது. பங்குகொண்டோர் மட்டுமல்லாது பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவருமே உள்ளம் உருகியதாகக் கூறினார்கள். 

ஈடு இணையில்லா உணர்வு தான் தாய்மை, அது பெற்ற அம்மாவாக இருந்தாலும் சரி, அத்தாய்மை உணர்வுள்ள அத்தனை உறவுகளும் தாய்க்குச் சமமானவர்களே!

-ஷீலா ரமணன் 

Leave a Reply

Your email address will not be published.