தொழில்நுட்பத்தின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியால் நாம் அடைந்து வரும் ஆதாயம் ஒரு புறம் இருக்க, அதே தொழில்நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி ஆதாயம் தேடும் போக்கும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தகவல்தொழில்நுட்ப யுகம் என்றறியப்படும் இன்றைய நாட்களில் தொழில்நுட்பம் நம் படுக்கையறை வரை நுழைந்து விட்டதை மறுத்திட முடியாது. இத்தகைய நிலையில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு நடக்கும் நூதன மோசடி குறிந்து விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.
இந்தத் தொழில்நுட்ப உலகில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களுக்கு பெரும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. நம்முடைய தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கப்பெறும் வகையிலான பெரும் பங்கை ஆற்றுவது சமூக வலைதளங்கள். அவை தரும் போலி மதிப்புகளையும், மாயைகளையும் நம்பி நாம் காட்டிக் குவிக்கும் கோமாளித்தனங்கள் ஏராளம். நம் தகவல்கள் என்ன தான் பாதுகாக்கப்பட்டு வரப்படுவதாய் சமூக வலைதளங்கள் கூறி வந்தாலும், தொழில்நுட்பம் மோசடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு துணை போவதாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பரிசு மோசடி, ஆன்லைன் விற்பனை மோசடி, வேலை வாய்ப்பு மோசடி என தினமும் நடந்தேறி வரும் விதவிதமான மோசடிகளில் புது இணைப்பு தான் முகநூல் மோசடி.
சமீபத்தில் பல பிரபலமான முகநூல் கணக்குகளிலிருந்து, தங்கள் புகைப்படங்களைக் கொண்ட போலி கணக்குகளின் படங்களைப் பகிர்ந்து, ” இது என் முகநூல் கணக்கல்ல, நண்பர்கள் யாரும் இந்த கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம் ” என எடுத்துரைக்கும் கோரிக்கைகள் வலம் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்தான உண்மையை அறியும் நோக்கில் நாம் களத்தில் இறங்கினோம்.
நீங்கள் முகநூலில் நன்கு பிரபலமானவராகவோ, நிறைய பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பவர்களாகவோ இருக்கும் பட்சத்தில் உங்களின் பக்கத்தில் பதியப்படும் புகைப்படங்களை இந்த மோசடி கும்பல் தரவிறக்கம் செய்கிறது. பின்னர் தரவிறக்கிய உங்கள் படங்களைக் கொண்டு உங்கள் பேரிலேயே ஒரு முகநூல் கணக்கை தொடங்கி உங்கள் கணக்கில் இருக்கும் நட்புக்கள் அனைவருக்கும் நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. அதற்கு முன் உங்கள் கணக்கின் மூலம் உங்களது செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. குறிப்பாக நீங்கள் மெசஞ்சர் செய்திகளுக்கு பதிலளிப்பவரா என ஆராயப் படுகிறது. பின்னர் இந்தத் தரவுகளைக் கொண்டு உங்கள் நட்புக்கள் ஒவ்வொருவராய்த் தொடர்பு கொண்டு அவரிடம் நீங்கள் பேசுவது போலவே பேசி அவசர உதவியாக பணம் தேவை எனக்கூறி ஒரு தொகையை கேட்டுப் பெறுகிறது இந்த மோசடி கும்பல்.
இது குறித்து நாம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, ” என் முகப்புப் படத்தை வைத்தே ஒரு புதிய கணக்கைத் தொடங்கி என் நட்புக்களிடம் பணம் கேட்டுள்ளனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க, மருத்துவ செலவுக்காய், அவசர தேவைக்காய் என விதவிதமான காரணங்களைச் சொல்லி பணத்தைக் கேட்டுள்ளனர். என்னைப் பற்றி நன்கு அறிந்த ஒண்றிரண்டு நண்பர்கள் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்ட போது பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த மோசடி நான் இதுவரையில் ஏற்படுத்தி வைத்திருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உடனடியாக முகநூல் நிறுவனத்திடம் நாங்கள் ரிப்போர்ட் செய்ததோட காவல் துறையிலும் புகார் அளித்தோம். காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பெயரிலும் கூட இத்தகைய போலி கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடி நடந்து வருகிறது. இது குறித்து காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் “, என ஆதங்கம் மேலோங்க தெரிவித்தார்.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் யார், தனி நபரா இல்லை குழுவா என காவல் துறை மண்டையைக் குடைந்து விசாரித்து வருகின்ற போதும் இதுவரையிலும் எந்தத் தகவல்களும் அகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சரியாக உபயோகிப்பவர்கள் ஒரு புறம் இருக்க, இது போல தவறாக உபயோகிக்கவும் ஒரு கூட்டம் இருந்திடவே செய்கிறது.
- சிறப்பு நிருபர்
NRI தமிழ்