குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் உள்ள ‘முகல்’ கார்டன் ‘அம்ரித் உத்யன்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம் என அறியப்பட்டும் தோட்டத்திற்கு “அமிரித் உத்யன்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார்.
இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும். மேலும், இந்த முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும். இவை தவிர, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், பெண்களுக்காக சில நாட்கள் பிரத்யோகமாக ஒதுக்கப்படும்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் இணைய தளத்திலும் அம்ரித் உத்யன் பற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சுமார் 15 ஏக்கர் விரிந்து பரவியிருக்கும் அம்ரித் உத்யன், அடிக்கடி குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆன்மாவாக சித்தரிக்கப்படுகின்றது.
கடந்த 1927-ம் ஆண்டு தொடக்கத்தில் சர் எட்வின் லுட்யின்ஸ் அம்ரித் உத்யன் தோட்டத்தின் வடிவத்தை இறுதி செய்தார். ஆனாலும், 1928 – 29 காலக்கட்டங்களில் தான் தோட்டம் உருவாக்கப்பட்டது. லுட்யின் தோட்டக்கலை நிபுணர் வில்லியம் முஸ்டோனுடன் இணைந்து இதனை உருவாக்கியது இதன் மற்றொரு சிறப்பு.
இந்திய மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டிடம் போலவே, லுட்யின்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார். முகலாயர் பாணி கால்வாய்கள், மேல்தளங்கள் பூக்கள் அடந்த புதர்கள் போன்றவை, ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.