ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு மாஸ்கோவில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாஸ்கோவில், 22 ஆவது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
அவரை, இந்திய முறைப்படி வரவேற்க ரஷ்யாவில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்தியா-ரஷ்யா உறவின் முக்கிய பாலமாக இருக்கும் ROSATOM கண்காட்சியை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட உள்ளனர். அதன் பிறகு, போரில் உயிர் தியாகம் செய்த ரஷ்ய வீரர்களின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அனைத்து துறைகளிலும் இருநாட்டு நல்லுறவு குறித்து புதினுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேசப் பிரச்னை குறித்து பல்வேறு பரிமாணங்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். உக்ரைனுடான போருக்கு பிறகு, பிரதமர் மோடி முதன் முறையாக ரஷ்யாவிற்கு செல்ல உள்ளதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவை தொடர்ந்து ஆஸ்திரியாவிற்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.