நவராத்திரி கொலு சிறப்புகளும், வழிபாட்டு முறைகளும்

ஆன்மீகம் இந்தியா செய்திகள் தமிழ்நாடு வரும் நிகழ்ச்சிகள்

தமிழ் மாதங்கள் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு பிரசித்தி பெற்றதாகும்.
கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம். வீற்றிருத்தல் என்பது இதன் பொருளாகும். உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும். புரட்டாசி அமாவாசை அன்றே கொலு வைப்பதற்குரிய செயல்கள் தொடங்கப் படுகின்றன.
வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் சுத்தமாக்கிப் புனிதப் படுத்துகின்றனர். மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் தகுந்தபடி அமைக்கின்றனர். சுத்தமான துணிகளால் அந்தப் படிகளைப் போற்றுகின்றனர்
முதல் படியின் நடுவில் கலசத்தை வைக்கின்றனர். ஒரு கலசத்தில் பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அந்தக் கலசத்தில் தேவி பிரசன்னமாகிறாள். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவைகள் முளை விட்டுச் செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்று நம்புகின்றனர்.
முதல் படியில்
புல், செடி, கொடி ஆகிய தாவர வகை பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். அதனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதை முதல் படியில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் உணர்த்துகின்றது.
இரண்டாம் படியில்
சங்கால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்க வேண்டும். குறிப்பாக நத்தை பொம்மைகளை வைக்க வேண்டும். நத்தை பொம்மை போல நிதானமாக வாழ்க்கையை நடத்தி உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
மூன்றாம் படியில்
எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை அவசியம் இருக்க வேண்டும். எத்தனை முறை உடைத்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போலவும், எத்தனை முறை கலைத்தாலும் எறும்புகள் ஒன்று சேர்ந்து சுறுசுறுப்பாக தங்கள் பணியைச் செய்வது போலவும், மனிதனுக்குத் திடமனப்பான்மையுடன் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்த பொம்மைகள் உணர்த்தும்.
நான்காம் படியில்
நண்டு, வண்டு பொம்மைகளை வைக்க வேண்டும். நண்டுகளும், வண்டுகளும் ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் குணம் கொண்டவைகள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதை இந்த பொம்மைகள் உணர்த்தும்.
ஐந்தாம் படியில்
மிருகங்கள், பறவைகள் உள்ளிட்ட பொம்மைகளை வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவைகள் போலக் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
ஆறாம் படியில்
மனித பொம்மைகளை வைக்க வேண்டும். கீழே இருக்கும் கொடிய விலங்குகளின் குணங்களைத் தவிர்த்து,நல்ல விலங்குகளான பூச்சிகளிடம் இருந்தாவது நல்லதைக் கற்றுக் கொண்டு, மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதைத்தான் ஆறாவது படி உணர்த்துகிறது.
ஏழாவது படியில்
முனிவர்கள் மற்றும் மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மனித நிலையில் ஆன்மிக சாதனைகள் செய்து, மேல் நிலைக்கு உயர வேண்டும் என்பதை இது குறிக்கிறது.
எட்டாம் படியில்
தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பொம்மைகளை வைக்க வேண்டும். ஆன்மிக நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து உயர் நிலையை அடைவதாக இது காட்டுகிறது.
ஒன்பதாவது படியில்
பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவரவர்களின் தேவியர்களின் சிலைகளுடன் கூடிய சிலைகளையும் வைக்க வேண்டும். தேவநிலையில் இருப்பவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்துவதை இது காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *