இந்திய மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் 2021-22-ஆம் கல்வியாண்டில் தங்களது உயர்கல்வியை மேற்கொள்ள அமெரிக்காவை தேர்வு செய்துள்ளனர். தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதிலிருமிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ள 10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களில் இந்திய மாணவர்கள் சுமார் 20 சதவீதம் உள்ளனர். மேலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இளநிலை பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக புதுதில்லி, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத், மும்பை ஆகிய 7 இடங்களில் உள்ள ஆலோசனை மையங்கள் மூலம் வருங்கால மாணவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஆலோசனை வழங்குகிறது. ஹைதராபாதில் 2-ஆவது ஆலோசனை மையம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்படவுள்ளது. அமெரிக்காவில் உள்ள அங்கீகாரம் பெற்ற 4,500 உயர்கல்வி நிறுவனங்களில் பொருத்தமான கல்வித் திட்டத்தை தேர்வு செய்ய இந்திய மாணவர்களுக்கு இந்த மையங்கள் உதவும். அமெரிக்காவில் கல்வி பயில்வது தொடர்பான கூடுதல் தகவல்களைக் கோரும் மாணவர்கள் EducationUSA என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
“கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. அமெரிக்காவில் அளிக்கப்படும் நடைமுறை பயன்பாடு மற்றும் அனுபவமானது உலகப் பொருளாதாரத்தில் நமது மாணவர்களுக்கு நன்மையை அளிக்கிறது’ என பொது விவகாரங்களுக்கான துணை ஆலோசகர் டேவிட் கென்னடி தெரிவிக்கிறார்.
