நுகர்வோர் நலனுக்காக, சமூக ஊடக பிரபலங்களுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு சமீப காலங்களாக மக்களிடையே அதிகரித்து உள்ளது. அவற்றில் தங்களது படைப்புகள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவோர் எண்ணிக்கையும் அதிரித்து வருகிறது. பல்வேறு தளங்களில் விரிவடைந்து வரும் இந்த சமூக ஊடக பயன்பாட்டு சந்தையானது, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி என்ற அளவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் நுகர்வோரின் நலனை பாதுகாக்கவும், தவறான வழிகாட்டும் வகையிலான விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு புது விதிகளை வகுத்து அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, சமூக ஊடக தளங்களில் உள்ள பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் திகழ்பவர்கள் மற்றும் கணினி வழியேயான கதாபாத்திரங்களை வெளியிடுவோர் ஆகியோருக்காக, மத்திய நுகர்வோர் விவகார துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இவற்றை மீறுவோர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் தண்டனை கிடைக்க பெறும். இதனால், தயாரிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அவற்றை ஊக்குவிப்போருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து குற்றங்கள் நீடிக்கும் என்றால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட கூடும்.
இதனையடுத்து, சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள், பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது, சலுகைகள் மற்றும் பெற்ற விருதுகள் ஆகிய விவரங்களை வெளியிட வேண்டும். பரிசுகள், ஓட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் நலன் சார்ந்த அனைத்து விவரங்களையும் அவர்கள் வெளியிடுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவரங்கள் எளிதில் புரிய கூடிய மற்றும் தெளிவான மொழியில் இடம்பெற வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் வெளியிட செய்யப்பட வேண்டும். அது லைவ் நிகழ்ச்சியாக இருந்துபோதும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த விளம்பரங்கள், செய்திகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.