நியூசெர்சி தமிழ்ப் பேரவை, இந்த ஆண்டு தன்னுடைய ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

உலகம் தமிழ் சங்கங்கள் நிகழ்வுகள் வட அமெரிக்கா

இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக “பொங்கல் கிராமியத் திருவிழா” சனவரி 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நம்முடைய தமிழர் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்து, குலவையுடன் பொங்கல் விழா காலையில் இருந்தே இனிதாகத் தொடங்கியது. நம் இளமைக்கால நினைவுகளை மீட்டும் வகையில் “பூக் கட்டுதல்” போட்டி நடைபெற்றது. “ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே” என்பது போல தங்கள் தமிழ்நாட்டு நினைவுகளுக்கு அமெரிக்காவில் வாய்ப்பளித்த நியூசெர்சி தமிழ்ப் பேரவைக்கு பங்கேற்ற அனைவரும் நன்றி தெரிவித்தனர். இயற்கை விவசாயம் குறித்து விழிப்பணர்வு அளிக்கும் வகையில் “முளைப்பாரி போட்டி” தமிழர்களின் வேளாண்மைச் சிறப்பினை நினைவு கூர்ந்தது. தொடர்ந்து நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கும்மி ஆட்டத்தில் விருந்தினர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கும்மி ஆட்டத்தால் சற்று களைத்துப்போன நேரத்தில், அனைவருக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையில் அற்புதமான வாழையிலை அறுசுவை பொங்கல் விருந்து நடைபெற்றது. நம் தமிழர்களுக்கே உரித்தான இனிய விருந்தோம்பலுடன் இவ்விருந்து சிறப்பாக நடந்தேறியது.  “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று உலகப் பொதுமறையில் உழவுக்கு முதல் இடமளித்த நம் அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை பாடலாக நம் குழந்தைகள் மேடையில் பாடினர். ஒவ்வொரு ஆண்டும் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் நியூசெர்சி தமிழ்ப் பேரவை, இந்த ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் திருக்குறள் பாடலையும் இணைத்து, தமிழுடன் நம் மறைநூலையும் வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்கியது. அது போலவே பொங்கல் விழாவின் பண்பாட்டு முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு விளக்க கைவினைப் பட்டறை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பேரவைத் தலைவர் திரு. சின்னசாமி பாப்பனன் அவர்கள் வரவேற்புரை வழங்க, மேடை நிகழ்ச்சிகள் மதியம் தொடங்கின. தொடர்ந்து வில்லுப்பாட்டு, சிலம்பம், ஒயில் கும்மி ஆட்டம், பறை இசை, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்ச்சிகள் வந்திருந்த அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தன. சிறப்பு விருந்தினர் “கொஞ்சம் நடிங்க பாஸ்” புகழ் திரு. ஆதவன் அவர்களுடன் இணைந்து நகைச்சுவை வினாடி வினா மற்றும் பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் ஆண்டு இதழான “பேரவைச் சரம்” இதழின் மூன்றாம் பதிப்பின் அச்சுப் பிரதியை சிறப்பு விருந்தினர் திரு.ஆதவன் வெளியிட்டார். “பேரவைச் சரம்” இதழின் பொறுப்பாசிரியர் திருமதி. சிறிலெட்சுமி கல்யாணசுந்தரம் அதனைப் பெற்றுக் கொண்டார். கொரோனா காலத்தில் மின்னூலாக வெளியான “பேரவைச் சரம்” இதழின் முந்தைய இரு பதிப்புகளின் அச்சுப் பிரதிகளை பேரவை இயக்குனர்கள் திரு. கருப்பையா கணேசன், திரு. கபிலன் வெள்ளையா, திரு. சசிகுமார் ரெங்கநாதன், திருமதி. சாந்தி தங்கராசு ஆகியோர் வெளியிட்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியாக, பேரவைத் துணைத்தலைவர் திருமதி. சிறிலெட்சுமி கல்யாணசுந்தரம் அவர்கள் பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து, தொடர்ந்து நமக்கு வழிகாட்டும் நம் பேரவையின் இயக்குனர் குழுவிற்கு நன்றி கூறி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *