நியூயார்க்கில் கந்தசஷ்டிப் பெருவிழா!

ஆன்மீகம் கடந்த நிகழ்ச்சிகள்

நியூயார்க் அருள்மிகு மகாவல்லபதி திருக்கோயிலில்  முருகன் சந்நிதியில் கந்தசஷ்டிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை ஆறுநாட்கள் – தினசரி மூலவர் வள்ளி சமேத சண்முகர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மிகச் சிறப்பாக அலங்காரங்கள், அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தினசரி பக்தர்களின் கந்த சஷ்டிப் பாராயணம் மற்றும் வேதமந்திர அர்ச்சனைகள் இடம் பெற்றன.

ஏழாம் நாள் நவம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சண்முகர்க்கு திருக்கல்யாண வைபவம் மிக விமரிசையாக நடைபெற்றன.

திருக்கல்யாண விருந்தாக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

சிவாச்சாரியார்கள்  சிவகுமார் சாமிநாதன், ஹரிகரன் உள்ளிட்ட திருக்கோயிலின் சிவாச்சாரியார்கள் குழுவினர், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்களுக்கான தினசரி விதவிதமான சிறப்பு அலங்காரங்களை, அழகுற – மிகக் கம்பீரமாக கண்டோர் வியக்கும் வகையில் அதிஅற்புதமாகச் செய்திருந்தனர்.

தினசரி நடைபெற்ற திருப்பனந்தாள் ஆதீனம குருமூர்த்தி (நாதஸ்வரம்), தருமபுரம் ஆதீனம் லக்ஷ்மணன் (தவில்) ஆகியோரின்  மங்கள வாத்திய இசை கந்த சஷ்டி விழாவுக்குக் கூடுதல் சிறப்புச் சேர்த்தது !

திருகோயில் தேவஸ்தான தலைவர் திருமதி உமா மைசூரேக்கர் தலைமையில் திரு பத்மநாபன், திருமதி ஸ்ரீமதி உள்ளிட்ட கோவில் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் கந்தர் சஷ்டி விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் மிக நிறைவாகச் செய்திருந்தனர்.

நியூயார்க் நகரில் கடந்த ஒரு வாரமாக நிலவிய கடும் மழை, சூறாவளிக் காற்று மற்றும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் குடும்ப சகிதமாக கந்தர் சஷ்டிப் பெருவிழாவில் பங்கேற்றனர்.

– சண்முகம் பெரியசாமி, நியூயார்க்