இந்தியாவில் வடமாநிலங்களில் கடும் குளிருக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உ.பி. மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தானின் சுரு பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்சியஸும், பஞ்சாபின் அமிர்தசரஸில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இந்த வருடம் குளிர் காலத்தில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நொய்டா, காஸியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
ஜன.5-ஆம் தேதி மட்டும் இருதய நோய் பாதிக்கப்பட்ட 723 பேர் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களில் 41 பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அவற்றில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் அதிக குளிர் தாங்கமுடியாமல் உயிரிழந்தனர். இதுதவிர 17 பேர் இறந்த நிலையில் சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டனர்.