இந்தியாவில் திருவிழா, பண்டிகை காலங்களில் புத்தாடைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் இதர உபயோகப் பொருட்கள் புதிதாக வாங்குவது வழக்கம். இன்றையக் காலகட்டத்தில் இணைய தளங்கள் மூலம் விற்பனை அதிகரித்த நிலையில் மக்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமே ஆர்டர் செய்து விலைக்கு வாங்குகின்றனர்.
பண்டிகை காலங்களில் கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்களை, புத்தாடைகளை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி செய்வது எளிது என்பதால் நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் ஆன்லைன் ஆர்டரையே மேற்கொள்கின்றனர்.
ஆனலைன் மூலம் ஆர்டர் செய்வதால் பல நன்மைகள். வீட்டிலிருந்தே தேவையானதை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம். அலைச்சல் முற்றிலும் தவிர்க்கப்படும். குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட இடத்தில் டெலிவரியைப் பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்துவது மிகவும் எளிது, மற்றும் எதாவது பிரச்சனையில் என்றாலும் கஸ்டமர் கேர் மூலம் தெளிவுப் பெற்றுக் கொள்ளலாம். இது எளிதாக இருப்பதால் மக்கள் கடைகளுக்கு நேரடியாக செல்வதைக் காட்டிலும் ஆன்லைன் ஆர்டரை நாடிச் செல்கின்றனர்.
அதிகமாக ஆன்லைன் ஆர்டர்கள் குவிவதால் இதில் போலிகளும், குளறுபடிகளும் அதிகமாகின்றன. குறிப்பாக விழாக்காலங்களில் இணையதளங்களில் அறிவிக்கப்படும் தள்ளுபடிகள் சில நேரங்களில் குளறுபடிகளை அதிகம் ஏற்படுத்துகின்றன. விழாக்காலங்களில் பொருட்கள், புத்தாடைகளின் விலையை இருமடங்காக்கி பிறகு தள்ளுபடி என்ற பெயரில் பாதியாக குறைத்து ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். 50 முதல் 65% தள்ளுபடி என இணையதளத்தில் முதலில் அறிவித்து பிறகு பணம் செலுத்தும்போது தள்ளுபடி ஏதுமின்றி விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. கடைகளில் அதேப் பொருட்களின் விலை ஆன்லைன் விலையோடு ஒப்பிடும்போது விலையில் வித்தியாசம் இருப்பதை அறியலாம். இப்படி மக்கள் ஆன்லைன் ஆர்டர்களில் சிலநேரம் ஏமாருவது வாடிக்கையாகிவிட்டது.