இன்றைய காலகட்டம் ஆன்லைன், சமூக வளைதலங்களின் காலமாக உள்ளதால் அதன்மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. மக்கள் அதன்மீது மோகமாக இருப்பதால் அதனை பயன்படுத்தி, தவறான வழிகளில் சிக்க வைப்பதும் அதிகரித்து வருகிறது. அதன் ஒருவகை தான் ஆன்லைன் ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்டம்.
இந்த ஆன்லைன் சூதாட்டம் போனஸ் என்ற பெயரில் முதலில் ஆன்லைன் பணமாக உங்களுக்கு தருவதுபோல தந்து உங்கள் ஆசையை தூண்டி உங்களை அதற்காக பணம் முதலீடு செய்து சூதாட்டம் விளையாட தூண்டும். முதலில் சூதாட்டத்தில் வெற்றிப் பெறச் செய்வது போல செய்து உங்களுக்கு சிறு லாபத்தை தரும். குறைந்த முதலீட்டில் விளையாடி லாபம் வருகிறதே என்ற ஆசையில் மேலும் மேலும் பணம் முதலீடு செய்வார்கள்.
இவ்வாறு உங்கள் பண முதலீடு அதிரிக்கும் தருவாயில் சூதாட்டத்தில் உங்கள் தோல்வியின் பயணம் ஆரம்பிக்கும். விட்டதை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் மேலும் பண முதலீடு செய்ய தூண்டும். ஒரு கட்டத்தில் உங்கள் சொத்து, பண இருப்பு எல்லாத்தையும் விற்று அதையும் மீறி கடன் வாங்கி முதலீடு செய்யும் அளவிற்கு உங்களை மோசமான சூழ்நிலைக்கு தள்ளும். ஆன்லைன் சூதாட்டத்தின் விளைவுகளை அறியாமல் அதற்கு அடிமையாகி, அனைத்தையும் இழந்து கடனாளியாகி, பிறகு தற்கொலை என்ற மிக பயங்கரமான முடிவை நோக்கி உங்களைத் தள்ளும்.
இவ்வாறு ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்து தற்கொலை செய்துகொள்வது இப்போது அதிகரித்துள்ளது. கடந்து 15 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 28 நபர்கள் தற்கொலை செய்துள்ளனர். சமீபத்தில் ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்னும் வாலிபர் பணம் பறிபோன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்தது தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டாங்களுக்கு உடனடியாக தடைச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. பிரபல நடிகர்களும் இதுபோன்ற விளம்பர படங்களில் நடித்து மக்களிடம் தப்பான விஷயத்தை கொண்டு போய் சேர்க்கக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
