இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பணவீக்க விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு விநியோக கடைகளில் அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி விட்டனர். பாகிஸ்தான் பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியும், இறக்குமதியும் குறைந்துள்ளதால் பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது அனைத்தின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பணவீக்கம் குறித்து அந்நாட்டின் முதலீட்டு நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்ப்பரேஷன் வௌியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37 சதவீதமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 31.60 சதவீதமாகவும், ஜனவரியில் 27.60 சதவீதமாகவும் இருந்தது. அதேசமயம் மாதாந்திர பணவீக்கம் 3.72 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டில் மொத்த பணவீக்க விகிதம் 27.26 சதவீதமாக காணப்பட்டது.
உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இதையொட்டி பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க ஒரேசமயத்தில் மக்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகி விட்டனர். இதனிடையே, பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இதனால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும், அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
