பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை நீட்டிக்க கோரி இம்ரான் கான் ஆஜரானார். அப்போது அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர், இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த தகவலை உறுதிப்படுத்த, பாகிஸ்தான் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தொடர்புகொண்டபோது, அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை.
பாகிஸ்தானில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு இணையாக சக்திவாய்ந்த அமைப்பாக அந்நாட்டு ராணுவம் இருக்கிறது. இந்நிலையில், எந்த ஆதாரமும் இல்லாமல் பணியில் உள்ள ஐ.எஸ்.ஐ அதிகாரிக்கு எதிராக “மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுமத்துவதாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியிருந்தது. அந்த கருத்து வெளிவந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இம்ரான் கான் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
