உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான சனிக்கிழமை தங்க சப்பரத்தில் பிட்சாடன கோலத்தில் பிச்சாண்டி சுவாமி வீதி உலா வந்தார்.
இதனை தொடர்ந்து இன்று சித்திரை திருவிழாவில் 8 ஆம் நிகழ்வில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார்.
விருச்சிக லக்னத்தில் சிறப்பு பூஜைகளுடன் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிவித்து, ரத்தினக் கற்கள் பதித்த செங்கோல் மீனாட்சியம்மனிடம் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் மதுரையின் அரசியாக மீனாட்சியம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியம்மன் ஆட்சி புரிகிறார். ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரர் ஆட்சி புரிகிறார்.