நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழா நேற்று மாலை தொடங்கியது. ஊர் மக்கள் சார்பில் 1000 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
விழாவையொட்டி பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டினர் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு இஸ்ரேல், இத்தாலி, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 60 பேர் செவ்வாய் பொங்கல் விழாவை காண வந்திருந்தனர். இவர்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து இவ்வூரில் உள்ள செட்டிநாட்டு கலாச்சாரத்துடன் கூடிய வீடுகள், கோயில்கள் முதலியவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.