அகமதாபாத்தில் இன்று தொடங்கிய இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பார்வையிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். முதலில், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தார். ஆண்டனி அல்பனிஸ், மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவருடன் முதல்வர் பூபேந்திர படேலும் சென்றார். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் பங்கேற்றார். அகமதாபாத் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியை காண்பதற்கு இந்திய பிரதமர் மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிசுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்தனர்.