உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதி வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் நேரில் சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பை செஸ் தொடர் தான் பெற்ற பதக்கத்தையும், சான்றிதழையும் பிரதமர் மோடியிடம் காண்பித்து பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோருடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு குறித்துய் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்துடன் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய இளைஞர்களுக்கு உதாரணமாக திகழும் பிரக்ஞானந்தாவின் ஆர்வமும், விடாமுயற்சியும் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
