என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி என்.எல்.சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
நீர், நிலம், விவசாயம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் ஜனவரி 31 மாலை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கம், என்.எல்.சி மூன்றாவது சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம், பெரியப்பட்டு சைமா சாயக்கழிவு ஆலை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தை பாழாக்கும் திட்டங்களை முறியடிப்போம் என அன்புமணி பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ஆவேச பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘அன்புமணின்னா டீசண்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்கான். வேட்டியை மடிச்சு கட்டுனா தெரியும் நான் யார்னு” என அவர் பேசிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.