முதல் இரண்டு நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் நாள் முடிவில் ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்துள்ளனர்.
இதுதவிர இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவுக்கு ரவி வர்மன், கலைக்கு தோட்டா தரணி என மிகப்பெரிய டெக்னிக்கல் டீமும் இப்படத்தில் பணியாற்றி உள்ளது. இத்தகைய பிரம்மாண்டமான படக்குழுவுடன் தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். 5 பாக நாவல்களை கொண்ட இப்படத்தை 2 பாகமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.
அதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் உலகளவில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாள் முடிவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை தாண்டி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விடுமுறை தினமான நேற்று இப்படம் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மூன்று நாள் முடிவில் ரூ.230 கோடியை தாண்டி உள்ளது. மூன்றே நாளில் 230 கோடி வசூலித்த முதல் தமிழ்படம் என்கிற சாதனையையும் இதன்மூலம் படைத்துள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.