பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை ஐந்தாண்டுகள் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

அரசியல் இந்தியா செய்திகள் முதன்மை செய்தி

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த அமைப்பின் கொடிய செயல்களை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்து, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள், ரெஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), அகில இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (என்சிஎச்ஆர்ஓ), தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், கேரளாவில் உள்ள ரெஹாப் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட முன்னணிகளை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின் கீழ் “சட்டவிரோத அமைப்புகளாக” அறிவித்துள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் 2-வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. தலைநகர் டெல்லியில் ஷாகின்பாக், ஜாமியா நகர் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள், டெல்லி சிறப்பு படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக இந்த பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் 32 பேர் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *