உலகளவில் பல ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் இருந்தாலும், பிரபலமாக இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு என்றுமே மவுசு அதிகம். ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் புதுவகை மாடல் அறிமுகமாகும் போது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுகமான அதே நாளில் மக்கள் அதனை புக் செய்துவிடும் அளவிற்கு பிரபலம். அமெரிக்கா கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் அறிமுக விழாவை லைவ் செய்யும். அதனை உலகெங்கும் லட்சக் கணக்கானோர் நேரலையை காண்பர்.
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோனில் ஐபோன் 13வரை அறிமுகம் செய்துள்ளது. ஐபோனுக்கென்றே ஐஓஎஸ் உண்டு, தனிச் செயலிகள், தனி வழிமுறைகள் உண்டு என்பதால் இதற்கு ரசிகர்கூட்டம் மிக மிக அதிகம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மட்டுமல்லாது ஸ்மார்ட் கடிகாரம், ஐபேட், ஹோம்பேட், ஆப்பிள் டிவி என பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது.
ஐபோன் வகை ஸ்மார்ட் போன்கள் சீனாவிலேயே தயாரிக்கப்பட்டு, அசெம்பல் செய்யப்பட்டு “மேடு இன் சீனா” என்ற அடையாளத்துடன் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும். சமீக காலகட்டத்தில் சீனா, அமெரிக்கா உறவில் விரிசல் எழுந்திருப்பதால் ஐபோன் 14 வகை ஸ்மார்ட் போன்கள் இந்த முறை இந்தியாவில் தயாரிக்க ஆரம்பிக்கப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் கசிந்துள்ளன. அவ்வாறு இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுமே ஆனால் அது சென்னையில் உற்பத்தியாகி “மேடு இன் இந்தியா” என்ற அடையாளத்துடன் சந்தையில் விற்பனைக்கு வரும்.