தமிழகம் வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, கன்னியாகுமாரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றிப் பார்த்தார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்று பார்வையிட்டுள்ளார். விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஒரு நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2-வது முறையாக முர்மு தமிழகத்திற்கு வந்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்த அவரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர். இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார்.
பின்னர் பேட்டரி கார் மூலமாக விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி பார்வையிட்டு, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு, மீண்டும் படகு மூலம் கரைக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக விவேகானந்த கேந்திரா செல்லும் ஜனாதிபதி, அங்குள்ள பாரத மாதா கோயிலில் வழிபாடு செய்கிறார்.
தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், ஜனாதிபதி திரௌபதி முர்மு கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர இன்று சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *