ஜூன் 15ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.
இதனிடையே கடந்த மாதம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி மாளிகையில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை கொடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற திரவுபதி முர்மு வருகிற ஜூன் 5ம் தேதி தமிழகம் வருவதாகவும் அன்றைய தினமே கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் சென்னை வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டுக்கு வருகை புரிகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் ஐந்தாம் தேதிக்கு பதில் ஜூன் 15ம் தேதி மருத்துவமனையை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார்.
