ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், அருணாச்சல்பிரதேசம், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.பி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் வழக்கு, முத்தலாக் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அமர்வுகளில் நீதிபதியாக இருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்ற அப்துல் நசீர், ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லாவும், அசாம் ஆளுநராக ராஜஸ்தான் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிசந்தன், சத்தீஸ்கரின் ஆளுநராகவும், சத்தீஸ்கரின் ஆளுநர் சுஸ்ரி அனுசுயா மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
பீகார் ஆளுநராக இருந்த பாகு சவுகான், மேகாலயா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநில ஆளுநராக லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவும்,
அருணாச்சல்பிரதேச ஆளுநராக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி திரிவிக்ராம் பர்னாய்க்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அருணாச்சல் பிரதேச ஆளுநர் பி.டி மிஸ்ராவை லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூர் ஆகியோரின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஆளுநராக பதவி வகித்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக கோவையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.