உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழா ஆரம்பம் – குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

இந்தியா கலை / கலாச்சாரம் செய்திகள் வரும் நிகழ்ச்சிகள்

சர்வதேச சிறப்பு வாய்ந்த மைசூர் தசரா திருவிழா கோலாகலமாக நேற்றுத் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மைசூர் தசரா திருவிழா தற்போது களைகட்டியிருக்கிறது. தொடர்ந்து 10 நாள்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும் நடப்பு ஆண்டு தசராவை நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். தசரா திருவிழாவைக் காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் மைசூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
தசரா விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,” மைசூரு தசரா திருவிழா இந்திய கலாசாரத்தின் உயர்வையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இரக்கமும் தியாகமும் கொண்ட தேவியான துர்கை, அநீதியை அழிக்கக்கூடியவள். அப்படிப்பட்ட தேவியை நவதுர்கையாக வழிபடுவதே நவராத்திரியின் சிறப்பு” என்றார்.
தசரா கொண்டாட்டம் குறித்து விழாக் குழுவினர் பேசும்போது, ” திருவிழாவை முன்னிட்டு மைசூரில் 290 கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மேலும், உணவுத் திருவிழா, மலர் கண்காட்சி, குழந்தைகள் தசரா, இளைஞர்கள் தசரா, பெண்கள் தசரா, விவசாயிகள் தசரா போன்றவையும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.