கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் தட்டிச் சென்றுள்ளது.
ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்த பரபரப்பான இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திலும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, சாம்பியனைத் தீர்மானிக்க ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட, கோன்சலோ மான்டியேல் அடித்த கோல் அர்ஜென்டினாவின் வெற்றிக்கான கோலாக அமைந்தது. பிரான்சை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது.
லியோனல் மெஸ்ஸி 2 முறையும், ஏஞ்சல் டி மரியா ஒரு முறையும் கோலை வலைக்குள் திணிக்க, பிரான்சுக்கு கிலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம், 1966-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஹர்ஸ்டுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் எம்பாப்பே பெற்றார்.
முடிவில், அர்ஜென்டினா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லுசைல் மைதானத்தில் தங்கக் கோப்பையை கைகளில் ஏந்திய தருணம் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் மணிமகுடமாக அமைந்தது.