ஆஸ்கார் நாயகனும் பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், ’99 சாங்க்ஸ்’ என்னும் திரைப்படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இசையை மையமாக கொண்டிருந்த அந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், தனது மனைவி சாய்ராவின் கதையை திரைக்கதையாக மாற்றி ‘லி மஸ்க்’ என்ற குறும்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் பிரான்ஸில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
36 நிமிடங்கள் கொண்ட இந்தப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை, அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தையும் வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடிக்கும் சாதனை திரைப்படமான இரவின் நிழலும் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.