நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வரும் 20ம் தேதி உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக உள்ளார். அமேதி தொகுதியில் 2004ம் ஆண்டு முதல் 2019 வரை ராகுல்காந்தி வெற்றி பெற்று வந்தார். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்து, பாஜக. வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். நடப்பு தேர்தலில் அமேதி, ரேபரேலி இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில், ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி மற்றும் அமேதி தொகுதிக்கு கிஷோர் லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுள்ளார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல்காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் 2வதாக ரேபரேலியிலும் களமிறங்குகிறார்.