சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி, அதிகளவு வசூல் குவித்து வெற்றி பெற்ற முக்கியமான திரைப்படம் RRR. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் ராம்சரண், NTR, அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தென் இந்திய சினிமாவின் தரத்தை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது என்று கூறினால் அது மிகையாகாது.
குறிப்பாக, இத்திரைப்படம் உலகளவில் சுமார் 1000 கோடிகளை தாண்டி வசூல் செய்திருந்தது. இதோடு இல்லாமல், RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை பெற்று தென் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்திருந்தது. இந்த விருதுக்கான கொண்டாட்டம் முடியும் முன்னதாக, கூடுதலாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது RRR திரைப்படம்.
அதாவது, சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கார் இறுதிப் பட்டியலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு தகுதியான ஒரே தென் இந்திய திரைப்படம் என்ற பெருமையை தனதாக்கியுள்ளது RRR திரைப்படம். இந்த தகவல் RRR திரைப்பட குழுவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.