சில்லறை பயன்பாட்டிற்காக டிஜிட்டல் ரூபாயை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கான முன்னோட்ட திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இணைய உலகில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் பிரபலமாக உள்ள நிலையில், மத்திய வங்கிகளும் அதிகாரப்பூர்வ கிரிப்டோ நாணயங்களை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியும், அதிகாரப்பூர்வ கிரிப்டோ நாணயமாக டிஜிட்டல் ரூபாயை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய வங்கி ’டிஜிட்டல் பணம்’ (CBDC) என இது அழைக்கப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் ரூபாயை சில்லறை பரிவர்த்தனைக்காக பயன்படுத்துவதற்கான முன்னோட்ட திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே, முதல் கட்டமாக, மொத்த பயன்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் மத்தியில் டிஜிட்டல் ரூபாய் முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சில்லறை பயன்பட்டிற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் பிரிவில், குறிப்பிட்ட நகரங்களில் முன்னோட்ட வடிவில் அமல் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பை, பெங்களூரு, தில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் இது அறிமுகம் ஆகிறது. ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் பாங்க் ஆகிய நான்கு வங்கிகள் இந்த சேவையை வழங்கும்.
டிஜிட்டல் ரூபாய் அடுத்த கட்டமாக, அகமதாபாத், காங்டாக், லக்னோ, ஐதராபாத், இந்தூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். பரோடா வங்கி, யூனியன் வங்கி, கோடக் மகிந்திரா உள்ளிட்ட வங்கிகள் இதில் இணையும்.
டிஜிட்டல் ரூபாய் என்பது ரொக்க பணத்திற்கு இணையான டிஜிட்டல் வடிவமாகும். இ-டிஜிட்டல் ரூபாய் பிரதானமாக சில்லறை பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் துறை, வங்கிசாரா வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் இதை பாதுகாப்பான பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தலாம். இந்த டிஜிட்டல் பணம் டிஜிட்டல் டோக்கன் வடிவில் அமைந்திருக்கும். பங்கேற்கும் வங்கிகள் அளிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பயனாளிகள் இதில் பரிவர்த்தனை செய்யலாம். பயனாளிகளுக்கு மத்தியில் மற்றும் வர்த்தகங்களுக்கு பணம் அனுப்பலாம். டிஜிட்டல் பணத்திற்கான உள்கட்டமைப்பின் துடிப்பான தன்மையை அறியும் வகையில் இந்த முன்னோடி திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.