மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக பட்டின பிரவேசம் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு பெரியார் திராவிட கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‛தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை எங்கள் உயிரைக்கொடுத்தாவது நடத்துவோம். தருமபுரம் ஆதீன மடத்திற்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்குக் காரணம்’ என முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த ஆதீனம் கூறியதாவது: தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததில் இருந்து ஆளுங்கட்சியினர் என்னை மிரட்டி வருகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் தொடர்ந்தால் பிரதமர், உள்துறை அமைச்சரை ஆகியோரை சந்தித்து முறையிடுவேன். மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதா? ஹிந்து மதத்தை வெள்ளைக்காரர்களால் கூட அழிக்க முடியவில்லை”. என்று ஆதங்கத்துடன் கூறினார்.
முன்னதாக மதுரை ஆதீனத்தை தன் தோள்களின் மீதேற்றி பட்டினப் பிரவேசத்தை நடத்திடுவேன் என பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.