ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் ஓயாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகையில் (கிரெம்லின்) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை படுகொலை செய்ய குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு உக்ரைன் மீது பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் கிரெம்லினை குறிவைத்து ஏவப்பட்டுள்ளன. இதை ரஷ்ய பாதுகாப்பு படை தடுத்து செயலிழக்க வைத்துள்ளது. இது திட்டமிட்டப்பட்ட பயங்கரவாத சதி, ரஷ்ய அதிபர் புதினின் உயிரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதலில் புதினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டடங்களுக்கும் எந்த சேதமும் இல்லை. இதற்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.