சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த விழாக் காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போதும் முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் 20 ஆம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும். இதையடுத்து வரும் 20 ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன் பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
