சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் நடை கடந்த மாதம் 20ம் தேதி அடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட
உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை. நாளை மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.
இதனை தொடர்ந்து வருகிற 17ம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். பின்னர் 17ம் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் இரவு 10 மணிக்கு ஹாரிவராசனம் சங்கீர்த்தனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். http://www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல், பம்பையில் உள்ள இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.