தமிழகத்தில், கேரளாவில் சமீபத்தில் அதிகம் பேசுபொருளானது பண்டிகை, சிறப்பு தினத்தில் விற்பனையாகும் மது, மற்றும் அதன் வசூல். கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பு தினங்களில், பண்டிகை தினத்தில் தமிழகத்தின் டாஸ்மாக் எவ்வளவு மது விற்கிறது, அந்த குறிப்பிட்ட தினங்களில் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது என்ற செய்தியை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
பூரண மதுவிலக்கு வேண்டும் என்று போராட்டக் குரல் வலுத்தாலும், புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது என்று மக்கள் கோரிக்கை வைத்தாலும் டாஸ்மாக் பெருமளவு வருவாயைப் பெற்றுத் தருகிறது. கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் நாள் மட்டும் கிட்டத்தட்ட 274 கோடி ரூபாய் மது விற்பனையில் மட்டும் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. இதே போல பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல கேரளாவிலும் மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. ஓனத்தை முன்னிட்டு 10 தினங்கள் மது விற்பனை அமோகமாக விற்றுத் தீர்ந்திருக்கிறது. ஒரு நாள் வருமானம் மட்டும் 117கோடி ரூபாய். ஏழு நாட்களில் கிட்டதட்ட 627கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது கேரளா மது விற்பனை.
சமீப நாட்களில் இளைஞர்கள் மது போதைக்கு, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும், அதனால் சமூகத்தில் பிரச்னை உண்டாவதும் மிகவும் வாடிக்கையாகி விட்டது. மிக மிக எளிதாக கிடைக்கும் மது, போதைப் பொருட்களால் மிகவும் சீரழிந்து வருகிறது இன்றைய இளைய சமுதாயம்.