தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து, சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல் குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடினார். இதேபோன்று மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு மு.க. ஸ்டாலின், இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டிற்கு செல்வதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் செல்லும் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்கு சென்று தேநீர் அருந்தினார். அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்தும் கலந்துரையாடினார்.
அதன்பின் சிங்கப்பூர் வாழ் தமிழறிஞர் திண்ணப்பனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தனது வாழ்க்கை வரலாற்று நூலான உங்களில் ஒருவன் முதல் பாக நூலினை வழங்கினார்.