தென்னிந்திய மொழிப்படங்கள் சமீக காலத்தில் தேசிய அளவில் பெயர் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழோ, தெலுங்கோ, மலையாளப் படங்களோ வெளியானால் தென்னிந்திய மொழிகளென முத்திரைக் குத்தப்படும். சிறந்த படமா இருந்தாலும், பெரும் வரவேறப்பைப் பெற்றாலும் கூட தேசிய அளவில் தங்கள் திரைப்படம் என சொல்வதே கிடையாது.
அந்த வழக்கத்தை தெலுங்குப் படமான “பாகுபலி” முறியடித்தது. பாகுபலி படம் உருவாகும் வரை, தேசிய அளவில் எதிர்பார்ப்போ பெரியளவில் இல்லை. வெளியாகி யாருமே நினைத்திடாத ஓர் வெற்றியை குவித்து “பான் இந்தியா திரைப்படம்” என பெயர் வாங்கியது. பான் இந்தியா என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான என்று பொருள் கொள்ளலாம். பாகுபலி முதல் பாகம் வெளியாகி, இரண்டாம் பாகமும் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பிரதிபலித்தது. பாகுபலி-2 உலகளவில் பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. 1000 கோடி யாரும் எதிர்பார்த்திராத ஓர் வசூல் சாதனை.
அதன்பின் வெளியான “கேஜிஎஃப்” கன்னட மொழிப்படம் பாகுபலி அளவிற்கு புகழ் பெற்று, இதனின் இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. கேஜிஎஃப் பாகம்-2ன் வசூல் பாகுபலி-2 அளவையும் முறியடித்து சக்ககை போடு போட்டது. கேஜிஎஃப் சமீபத்திய பான் இந்திய திரைப்படமாக அனைத்து மொழி மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் வெளியான தெலுங்கு திரைப்படம் “ஆர்ஆர்ஆர்” படமும் ஆயிரம் கோடி அளவிற்கு வசூல் சாதனை செய்து தேசிய அளவில் பேசப்பட்டது.
தமிழில் சமீபத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படமும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு 800 கோடி அளவிற்கு வசூல் செய்தது. இவ்வாறு ஒட்டுமொத்த இந்தியாவும் தென்னிந்திய மொழிகளின் படைப்புகளை கூர்ந்து கவனிக்கிறது, கவனமும் பெருகிறது. இத்தகைய மாற்றம் தென்னிந்திய திரைப்படங்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.