மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 101.35 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 87.54 மிமீ மற்றும் 102.55 மிமீ மழையும் பதிவாகியுள்ளன. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் ரயில் சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கியது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அந்தேரி மற்றும் ஜோகேஸ்வரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் இரு முறை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இம்மாதத்தில் அதிகபட்சமாக மொத்தம் 1557.8 மிமீ மழை பெய்துள்ளது. 2020ம் ஆண்டில் 1502 மிமீ மழை பெய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.
தற்போது, இந்தாண்டு அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து மிக கனமழை நீடிக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை பல்கலைக்கழகம், நகரம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே டெல்லி, தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்திராபூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.
