நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான கலாச்சார முக்கியத்துவத்தையும், பிணைப்பையும், ஒற்றுமையையும் பறை சாற்றும் விதமாக குஜராத்தில் ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ இரண்டு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சங்கம நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
இதில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 3,000 பேர் சிறப்பு ரயில் மூலம் குஜராத் செல்கின்றனர். இந்த இரண்டு வார கால நிகழ்வு ஏப்ரல் 17 முதல் 30 வரை குஜராத் மாநிலம் சோம்நாத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கொடியை தொடங்கிவைத்தார்.