அமெரிக்காவிலிருந்து வந்த வயதான தம்பதிகள் கொலை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையிக் மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர்கள் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியர். இவர்கள் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியவர்கள் ஆவர்.
அண்மையில் கொலையான இவர்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வீட்டில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணா அவரது நண்பர் உடன் சேர்ந்து இந்த கொலைகளை செய்துள்ளது தெரிய வந்தது
டிரைவர் கிருஷ்ணாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலையில் நெமிலிசேரி அருகே கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் செயல்பட்டு வந்த இடத்திற்கு எதிரே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது. இந்தக் கொலை 20 லட்சம் பணம் மற்றும் நகை ஆகியவற்றைக் கொள்ளை அடிக்க நடைபெற்றதும் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து சில மணி நேரத்தில் துப்பு துலக்கி கொலையாளிகளைப் பிடித்த போலீசாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமான எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ இன்று மயிலாப்பூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு விளக்கத்தைக் கூற விரும்புகிறேன். சென்னை மயிலாப்பூரில் குடியிருந்த அமெரிக்காவிலிருந்து திரும்பிய தம்பதி ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா காணாமல் போனது குறித்து அன்று மதியம் 1 மணி அளவில் புகார் பெறப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதற்காகச் சிறப்புத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியோடு, ஸ்ரீகாந்துக்கு சொந்தமான இன்னோவா காரோடு அவரது ஓட்டுநர் ஆந்திராவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக செயல்பட்ட போலீசார், எந்தவித தாமதமுமின்றி, ஆந்திர போலீசாரின் ஒத்துழைப்புடன் பிரகாசம் மாவட்ட சோதனை சாவடியில் இன்னோவா காரை பிடித்துள்ளனர்.
வெறும் 6 மணி நேரத்தில்
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், 50 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும், ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தும் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இது முழுக்க முழுக்க ஆதாயக் கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரம் முழு விசாரணையும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த இரட்டை கொலையில் 6 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளைக் கண்டுபிடித்த சென்னை மாநகர காவல்துறைக்கும், தனிப்படை போலீசாருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் துறையாகவே இந்த ஆட்சியில் இருக்கும் காவல்துறை உள்ளது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு நினைவூட்டுகிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.