தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பிறகு உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று அவருடைய பிறந்த நாளில், அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் மற்றுமொரு முன்னோடித் திட்டம் இங்கு தொடங்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் எது என்று யாரைக் கேட்டாலும், “அது என்னுடைய பள்ளிக் காலம்தான்” என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.
நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள்;அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள். தமிழ்நாட்டின் தொழிற்துறையில் மிகச் சிறப்பான நிலையில், முன்னிலையில் இருக்கக்கூடிய திரு. வேணு சீனிவாசன் அவர்கள், இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷனின் தலைவராக இருப்பதும், பவுண்டேஷனின் தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் இருப்பதும் நமக்கெல்லாம் கிடைத்திருக்கக்கூடிய பெருமை.
இதற்கு தொடக்கமாக நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயை இந்தத் திட்டத்திற்காக நான் அளிக்கிறேன். உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசுப் பள்ளிகளுக்கே செலவிடப்படும் என உறுதி கூறுகிறேன். நம் பிள்ளைகளின் கல்விக்கென உங்களிடம் நிதியுதவி வேண்டி நிற்கும் இந்தக் கோரிக்கையை ஏற்று நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காக வாரி, வாரி வழங்கிடவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவுப் பள்ளியை நாம் உருவாக்குவோம் என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.