பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்னும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.